ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தர்மயுத்தம் நடத்தியது என்னவோ ஓ. பன்னீர்செல்வம். ஆனால், அந்த யுத்தத்தில் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகிவிட்டார். யுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் இன்று சத்தமே இல்லாமல் எடப்பாடியோடு இருக்கிறார்.
நான்கு மாதங்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆரூடம் கூற, ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என டிடிவி பயமுறுத்த நான்கு மாதங்கள் என எண்ணப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தற்போது வெற்றிகரமாக நான்கு வருடங்களை நிறைவு செய்திருக்கிறது.
அவரது இந்த நான்காண்டு ஆட்சியின் சாதனைகள், சர்ச்சைகள், சறுக்கல்கள் மூன்றும் இருக்கிறது. சாதனைகளின் அளவு குறைந்தாலும் சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
சாதனைகள்:
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அறிவித்தது, பயிர்க்கடன்களை ரத்து செய்தது, பாலங்கள் கட்டியது, குடிமராமத்துப் பணிகள், மாபெரும் சரபங்கா நீரேற்று நிலையம் அமைத்தது, கரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியது, தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசம் என்று இந்தியாவிலேயே முதல்முறையாக அறிவித்தது என பழனிசாமி செய்திருக்கும் விஷயங்கள் சாதனைகளா இல்லையா என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.
சர்ச்சைகள்:
பழனிசாமியின் ஆட்சியில் சாதனைகளை, சர்ச்சைகளை ஒரே தராசில் வைத்தால் சர்ச்சைகள்தான் அதிகம் இருக்கும். மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்ற பெயரில் தமிழ்நாட்டை தாரைவார்த்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு வலுவாக இருக்கிறது.
ஜெயலலிதா என்னென்ன திட்டங்களை எதிர்த்தாரோ, அந்தத் திட்டங்களையெல்லாம் ஈபிஎஸ்ஸூம், ஓபிஎஸ்ஸூம் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
மேலும், தூத்துக்குடியில் போராட்ட களத்திற்கு வந்த அப்பாவி பொதுமக்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதும், நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பழனிசாமியிடம் கேட்டபோது, அந்த செய்தியை நான் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று கூறியதும், ரோம் பற்றி எரியும்போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னனாய் காட்சியளித்தார்.
ஒக்கி புயலால் அலசித் துடைக்கப்பட்ட கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எடுக்கப்படாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எடுத்தும் ஒழுங்காக செய்யப்படாத மீட்புப் பணிகள் என அவரது ஆட்சியின் மீது கடும் கரும்புள்ளிகள் விழுந்துள்ளன.
அதேபோல், டெல்டா மாவட்டங்களை வாரிச் சுருட்டிக்கொண்டு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின்னோக்கி போட்ட கஜா புயலின்போதும் ஒக்கி புயலின்போது செய்த அதே தவறுகளை தொடர்ந்தது பழனிசாமியின் அரசு.
மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் சிறப்பாக நடந்தது என அமைச்சர்கள் தங்களுக்குத் தாங்களே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தாலும் கள நிலவரம் வேறு மாதிரியாக இருந்தது என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
கொடுமையின் உச்சமாக பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு மிரட்டியவர்களை கால தாமதமாகக் கைது செய்தது, மேலும் இந்த விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் மற்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மகன்களுக்கு தொடர்பிருப்பதாக வெளியான செய்திகள் என அவரது ஆட்சி மீது பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லா எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தற்போது நிறைவடையவிருக்கிறது. மீண்டும் அந்த ஆட்சி தொடருமா தொடராதா என்பதை மக்கள் முடிவு செய்துகொள்வார்கள். ஆனால், இந்த ஆட்சிக்காலத்தின் சர்ச்சைகள் எக்காலமும் முடியாது என்ற உணர்வும், ஆட்சி மீண்டும் வந்தால் இதே போன்ற சர்ச்சைகள் மீண்டும் ஏற்படக்கூடாது என்ற எதிர்பார்ப்பும்தான் பலரிடத்தில் இருக்கிறது.
சறுக்கல்கள்:
சசிகலாவின் தயவால்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார் என்றாலும், பல அழுத்தங்களுக்கிடையே எடப்பாடி பழனிசாமி கட்சியையும், ஆட்சியையும் தக்கவைத்துள்ளார் என்று ஒரு தரப்பினர் பாராட்டுகிறார்கள். மேலும், மேடைக்கு மேடை தன்னை ஒரு விவசாயி என்று கூறிக்கொண்டு மக்களில் ஒருவனாக தன்னை முன்னிறுத்துவதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறலாம்.
அதேபோல், பாரதிய ஜனதா கட்சியின் பரிபூரண ஆதரவைப் பெற்றவராகக் கூறப்படும் ஓபிஎஸ்சின் கடும் நெருக்கடிக்கிடையிலும் தன்னை அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டு ஒரு ஆளுமையாக அவர் நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும், தமிழ்நாட்டையும், அதிமுகவையும் ஒட்டுமொத்தமாக டெல்லியிடம் ஒப்படைத்துவிட்டார் என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை வெல்லும் அளவுக்கு அவரது செயல்பாடும் இல்லை, அவரது பேச்சும் இல்லை.
சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க 100 விழுக்காடு வாய்ப்பே இல்லை என்று கூறிய பழனிசாமி, சசி ரிலீஸ் தேதியான 27ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தை திறந்தார். திறந்த நினைவிடத்தை சசிகலா தமிழ்நாட்டுக்கு வரும்போது அவசர அவசரமாக மூடினார். தேர்தல் பரப்புரையில் சசிகலாவை நேரடியாக டார்கெட் செய்யாமல், டிடிவி தினகரனை டார்கெட் செய்து கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்த எடப்பாடியின் ரத்தத்தின் ரத்தங்கள், “பயப்படுறியா குமாரு” மைண்ட் செட்க்கு சென்றுவிட்டனர்.
ஆனால், சசிகலா குறித்த கவனம் மக்களுக்கு வந்துவிடக்கூடாது, தான் அவரை ஒரு பெரிய எதிரியாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை மக்களுக்கு உணர்த்தவே அவர் சசிகலாவை டார்கெட் செய்வதில்லை என்கின்றனர் ஒருதரப்பினர். இருப்பினும், ஒருவேளை சசியின் வருகைக்கு பிறகு அமைதியாக இருக்கும் ஓபிஎஸ் சசிகலாவுடன் இணைந்துவிட்டால் சூழல்கள் மாறலாம் அதனால் இப்போது சசிகலாவை டார்கெட் செய்ய வேண்டாம் என்ற முணுமுணுப்பும் கேட்கிறது.
இப்படி அவர் மீது வைக்கப்படும் சில விமர்சனங்களை, அவர் கடந்து போவதன் மூலம் தன்னை ஒரு பக்குவப்பட்ட தலைவனாக காட்சிப்படுத்த முயல்கிறார். ஆனால், விமர்சனங்களைக் கண்டு மௌனத்தால் பதில் சொல்பவன் பக்குவப்பட்ட தலைவன் இல்லை. அப்படி இருந்தால் அந்த முகமூடி விரைவில் கிழிந்துவிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். எதெல்லாம் தன்னை ஏற்றிவிட்டுக்கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி நினைத்துக்கொண்டிருக்கிறாரோ அதெல்லாம்தான் அவருக்கு சறுக்கல்களாக கூடி வந்துகொண்டிருப்பதாகக் கூறுகின்றனர் சிலர்.
நான்கு மாதங்களில் கலையப்போகிற ஆட்சி என கூறப்பட்டதை உடைத்து நான்கு வருடங்களை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நான்கு மாதங்கள் To நான்கு வருடங்களில் அவர் தனிப்பட்ட முறையில் வெற்றி நடை போட்டாரா இல்லை தமிழ்நாடு வெற்றி நடை போட்டதா என்பது இன்னும் 3 மாதங்களில் தெரிந்துவிடும்.