சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் இல்ல திருமண விழா சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதன் பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "ED அதிகாரிகள் இன்று செந்தில்பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி, அவரையும் கைது செய்துள்ளனர். இது இப்போது நடந்த வழக்கு அல்ல, தொடர் நடவடிக்கையின் காரணமாக நடந்தது. ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் என்று விசாரணை நடந்து வந்ததால்தான் இவ்வளவு காலத்திற்குப் பிறகு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 6,000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில், 4,000 கடைக்கு டெண்டரே விடப்படவில்லை. இரண்டு ஆண்டுகளாக அந்த கடைகள் முறைகேடாக செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் வரும் வருவாய் செந்தில் பாலாஜி மூலமாக திமுக மேலிடத்துக்குப் போகிறது என பத்திரிகை, ஊடங்களில் செய்திகள் வெளியாகின. இது குறித்து இரண்டு முறை நாங்கள் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்.
கடந்த இரண்டாண்டு காலத்திலேயே முறைகேடாக செயல்பட்டு வந்த இந்த பார்கள் மூலமாகவும், அவற்றின் மூலம் போலி மதுபானம் விற்கப்பட்டது மூலமாகவும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளனர். அதேபோல், மதுபான ஆலையில் இருந்து கலால் வரி செலுத்தாமலேயே கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யபட்ட மதுபானங்களில் ஒரு குவாட்டருக்கு 100 ரூபாய் அளவில் இவர்களுக்கு கிடைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு மதுபான பாட்டிலுக்கு பத்து ரூபாய் உயர்த்தி விற்பனை செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இப்படி முறைகேடாக சம்பாதித்த பல கோடி ரூபாய் முதலமைச்சரின் குடும்பத்துக்கு சென்றதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்துதான் முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் தெளிவாக சொல்லியிருந்தார். உதயநிதியும் சபரீசனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர் என்று ஆடியோவில் கூறியிருந்தார்.
செந்தில் பாலாஜி ஏதோ உத்தமர் போல, ஸ்டாலின் புலம்பி வருகிறார். பொருளாதாரக் குற்றப்பிரிவும், வருமான வரித்துறையும் வேண்டுமென்றே ரெய்டு நடத்துவதாக கூறி வருகிறார். இதே ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசுவது ஒன்று, தற்போது பேசுவது வேறு. முதலமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார். உதயநிதி, சபரீசன் குறித்து ஏதாவது பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில்தான் அனைவரும் செந்தில் பாலாஜியை சென்று பார்க்கின்றனர். செந்தில்பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால், தார்மீக பொறுப்பு ஏற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கூறினார்.