சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை, அதிமுக தலைவர்களை பற்றி அண்ணாமலை அவமதித்து பேசினால் தகுந்த விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என கூறியிருந்தார். இதற்கு அண்ணாமலையும் பதில் அளிக்கும் வகையில் பேசி இருந்தார். இது மீண்டும் அதிமுக - பாஜக இடையே வார்த்தைப் போராக மாறியது.
இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை, மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை (செப்.25) மாலை 4 மணியளவில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகிய அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "மகளிர் உரிமைத் தொகையை எல்லா குடும்பங்களுக்கும் வழங்குக" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக எம்.ஜி.ஆர் மாளிகையில், 25.9.2023 திங்கள் கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். மேலும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால், நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் கோவை சுற்றுப்பயணம்.. காரை நிறுத்தி திடீர் ஆய்வு - மிரண்ட அதிகாரிகள்!