சென்னை: நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் என்கிற நிதி நிறுவனம் மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களாகத் திருச்சியைச் சேர்ந்த வீரசக்தி மற்றும் பாலசுப்ரமணியன் என்பவரும், தலைமை நிர்வாக இயக்குநராகக் கமலக்கண்ணன் மற்றும் லாவண்யா உள்ளிட்டோரும் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாகத் தருவதாகவும் மாதம் 12 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும் பொதுமக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொதுமக்கள் பலர் நியோமேக்ஸ் நிறுவனத்தில் 5000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளார்.
இந்நிலையில் பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை முறையாகத் திருப்பி வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: ஜோசியம் பார்த்து பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர் - பதவிக்காக விபரீத பரிகாரம்
இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 92 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த நிறுவனமானது சட்டவிரோத பணப் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ரூ.17.25 கோடி மதிப்புடைய 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டு இருந்தன.
மேலும் விசாரணையில் நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடி செய்து அந்த பணத்தினை ஷெல் என்ற போலி நிறுவனங்களைத் துவக்கி அதில் முதலீடு செய்ததையும், போலி ஆவணங்கள் வாயிலாக முறைகேட்டில் ஈடுபட்டதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நியோமேக்ஸ் நிதி நிறுவனம் பொது மக்களிடம் மோசடி செய்து, சட்டவிரோத பணம் பரிமாற்றத்தில் ஈட்டுப்பட்டது உறுதியானதால் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் சுமார் 207 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக துறை அதிகாரிகள் முடக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.