தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து இயக்குநர் கௌதமன் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கௌதமன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், பாரத் பெட்ரேலியம் நிறுவனத்தில் உயர் பதவி வகித்து வருகிறார். ஆனால் அதுகுறித்து வேட்புமனுவில் அவர் தெரிவிக்கவில்லை என்றும், திமுக வேட்பாளர் கனிமொழி தனது சிங்கப்பூர் சொத்துக்களுக்கு முறையான ஆவணங்களை வேட்புமனுவுடன் சமர்ப்பிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
ஆனால், இதுபோன்ற பலவிதமான குறைபாடுகளுடைய வேட்புமனுக்களைத் தூத்துக்குடி தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி ஏன் ஏற்றுக்கொண்டார் ? எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய கவுதமன், இதன்மூலம் தேர்தல் ஆணையம் 100% தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை எனக் கடுமையாக விமர்சித்தார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் துள்ளத் துடிக்கச் சுட்டுக்கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்தவர்கள் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார்கள். அவர்கள் வெல்ல விட மாட்டோம் எனச் சூளுரைத்த அவர், என் புகார் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் அலுவலர் கூறுள்ளதாகத் தெரிவித்தார்.