பல ஆண்டுகளாக மின்வாரியத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி சென்னை அண்ணா சாலை அருகே உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலக முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், மின் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழிமறித்து கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன், "மின் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. ஆனால், அரசோ ஒப்பந்தத் தொழிலாளர்கள் இல்லை என ஒவ்வொரு மாதமும் சான்று வாங்குகிறது. மின்சார வாரியத்தில் நிரந்தரப் பணியிலிருக்கும் கள உதவியாளர் செய்யும் வேலையைத்தான் ஒப்பந்தத் தொழிலாளர்களும் செய்துவருகின்றனர்.
தற்போது கள உதவியாளர் பணிக்கு 18 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். கஜா புயலின்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியை அரசும் பொதுமக்களும் பாராட்டினர். ஆனால், அரசு அவர்களை நிரந்தரப்படுத்த தேவையற்ற கால தாமதத்தை ஏற்படுத்திவருகிறது. தமிழ்நாடு அரசும் மின்சாரத் துறை அமைச்சரும் உடனடியாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்கி படிப்படியாக நிரந்தரமாகப் பணியில் அமர்த்த வேண்டும்.
அரசு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கவில்லையென்றால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தார்.