தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஐந்து துணை மின் நிலையங்களைப் பராமரிக்கும் பணியை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ஒயர்மேன், ஹெல்பர் ஆகிய பணியிடங்களில் தனியார் நிறுவனம் மூலம் ஆட்களை நியமனம் செய்வதற்கும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் படித்த இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு பெறுவது பறிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளனர். இந்தக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள மின் வாரிய அலுவலகங்களில் இன்று (டிச.21) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
![தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-tneb-protest-script-vedio-7204807_21122020111741_2112f_00422_601.jpg)
சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்திலும் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர்கள் தலைமையில் காலையிலிருந்து தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. உள்கோட்ட அளவில் தனியார் நிறுவனங்கள் மூலம் மின்வாரியத்தில் ஹெல்பர் மற்றும் ஒயர்மேன் பணியிடங்களை நிரப்புவதை வாபஸ் பெறும் வரை தங்களின் தொடர் போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ”தொடர் போராட்டத்தால் மாநிலம் இருளில் மூழ்கினாலும் அதற்கு தாங்கள் காரணமல்ல, அரசும் அமைச்சரும்தான் காரணம்” என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தங்களை நேரில் அழைத்துப் பேசும் வரை டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதுபோல் தங்களது போராட்டம் தொடரும் எனவும் மின்சார வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மின் துறை அமைச்சர் தங்கமணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை நேரில் சந்தித்தார். அப்போது அவரை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சார ஊழியர்கள் தங்களது இந்தப் போராட்டத்தைத் தொடங்கியபோது நமது ஈடிவி பாரத் ஊடகம் முதல் செய்தியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மின்வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு!