ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாரதிவீதியில் செயல்பட்டுவருகிறது தமிழ்நாடு மின்சார வாரிய புதுப்பாளையம் பிரிவு அலுவலகம்.
இங்கு பணியாற்றும் அலுவலர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மின் வாரிய அலுவலகம் நேற்று மூடப்பட்டு அங்கு பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இன்று பணிக்கு திரும்பிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படாததினால் பணியை புறக்கணித்து திரும்பிச்சென்றனர்.
மேலும் அலுவலகத்தில் பணியாற்றும் 45 அலுவலர்களும் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றவேண்டும். அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட வேண்டும். கரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை அலுவலர்கள் பணிக்கு வராமல் இருக்கவுள்ளோம் என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மின் வாரிய அலுவலகத்திற்கு மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச்சென்றனர். இன்று மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் என்பதனால் அபராத கட்டணத்தை தவிர்க்க அருகில் செயல்படும் தனியார் கனிணி மையத்தில் கூடுதல் கட்டணம் செலுத்தி மின் கட்டணம் செலுத்தியும் வருகின்றனர். அலுவலர்களின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே மாதிரியான மின்கட்டணம் வசூலிக்கக் கோரிய வழக்கு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க உத்தரவு...!