சென்னை: கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய சட்டத்துறை அமைச்சகம் உயர்நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் இணையதளம் மூலம் வழக்கு பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய சட்ட அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி உயர்நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்வதற்கு இணையதள முறையை உருவாக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் முக்கிய நோக்கமாக காகிதங்கள் சேமிப்பு, பணம் மற்றும் நேர விரயத்தை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டது.
அழிக்கப்படும் மரங்கள்: இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் காகிதங்களின் எண்ணிக்கையை விட, நீதிமன்றங்களில் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் வருடத்திற்கு ஏறத்தாழ 60 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் வருடத்திற்கு 1 கோடியே 25 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக 11 பில்லியன் பேப்பர்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. பேப்பர்கள் தயாரிப்பதற்காக அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு பேப்பர் தயாரிப்பதற்க்கு 10 லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பேப்பர் தயாரிப்பதற்காக மட்டும் வருடத்திற்கு 13 லட்சம் மரங்கள் அழிக்கப்படுவதுடன், 109 மில்லியன் லிட்டர் தண்ணீரும் வீணடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இணையதள பதிவு முறையால் தண்ணீர் மற்றும் மரங்களின் அழிக்கப்படுவது எதிர்காலத்தில் தடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இ- சேவை அறிமுகப்படுத்தப்பட்டால், நீதிமன்ற பணிகளில் வெளிப்படை தன்மை ஏற்படும். பாதுகாக்கப்பட வேண்டிய நீதிமன்ற ஆவணங்கள் கரையான்களாலும், நீண்ட காலம் பராமரிக்க முடியாததாலும் அழிவது தடுக்கப்படும். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகளை மேற்கோள் செய்ய மாவட்ட நீதிமன்றங்களுக்கு எளிதில் கிடைக்கும்.
இணையதள வழக்குப்பதிவு: இணையதள வழக்குப்பதிவு முறைப்படி, வழக்கு தொடர நினைக்கும் எவரும் சுலபமாக பதிவு செய்து விடலாம். இதன் மூலம் குற்ற வழக்குகளில் காவல்துறையினர் பதிவு செய்யும் குற்றப்பத்திரிக்கை மற்றும் இதர ஆவணங்களையும் எளிதில் பெற முடியும்.
இணையதள வசதி இருந்தால் இலவசமாக விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பி.டி.எப் முறையில் நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்ய முடியும். இந்த முறையில் பதிவு செய்பவர் அவதூறானவற்றை பதிவு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இணையம் மூலம் வழக்கு பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து உதவுவதற்காக உயர்நீதிமன்றத்தில் செயல்படும் சிறப்பு சேவை மையங்கள் காலை 9 மணியில் இருந்து மாலை 7 மணி வரை செயல்படுகிறது.
இ-சேவை நீதிமன்ற பணியில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருமா? : இ- சேவை அறிமுகப்படுத்தப்பட்டால், நீதிமன்ற பணிகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படும். பாதுகாக்கப்பட வேண்டிய நீதிமன்ற ஆவணங்கள் கரையான்களாலும், நீண்ட காலம் பராமரிக்க முடியாததாலும் அழிவது தடுக்கப்படும். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகளை மேற்கோள் செய்ய மாவட்ட நீதிமன்றங்களுக்கு எளிதில் கிடைக்கும் என்பதால் சந்தேகமில்லை.
ஆனால், ஏன் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? அதற்கு காரணம் என்ன? என வழக்கறிஞர்கள் தரும் விளக்கத்தை விரிவாக பார்க்கலாம். தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், "உரிய கட்டமைப்புகள் ஏற்படுத்தாமல் இணையதள வழக்கு பதிவு முறை நடைமுறையில் சாத்தியமில்லை.
உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன? உச்சநீதிமன்றத்தின் முடிவு மரங்களின் அழிவை தடுக்கும் என்றாலும், வழக்கை எப்படி பதிவு செய்வது என்பது இன்னும் பலருக்கு தெரியவில்லை. இதனால், நீதிமன்றங்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வரவேற்க தகுந்த இந்த முடிவை உடனே அமல்படுத்தாமல், நேரடிப்பதிவு மற்றும் இணையதள பதிவை சேர்த்து அமல்படுத்தலாம். எப்பொழுது இணையவழி சேவை அனைவருக்கும் தடையில்லாமல் கிடைக்கிறதோ? அப்போது நேரடி பதிவு முறையை நீக்கி விடலாம்.
மாவட்ட அளவில் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? அதை எப்படி தீர்ப்பது? என விசாரிக்கப்பட்டது. பெரும்பாலான வழக்கறிஞர்கள் தரப்பில் அதிவேக இணையதள சேவை இல்லாமல் வழக்கு பதிவு செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. அதனால், தலைமை நீதிபதியிடம் விரைவில் கோரிக்கை வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
நிபுணர் கூறுவது என்ன: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன், "நீதிமன்றங்களில் இணையதள வழக்கு பதிவு முறை வரவேற்புக்குரியது. ஆனால், இதை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் இந்த நடைமுறை சாத்தியமான ஒன்று. மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளை எந்த அடிப்படையில் பதிவு செய்வது? எப்படி ஆவணங்களை இணைப்பது என்ற பல சந்தேகங்களை தீர்க்க இ-சேவை மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.
வழக்கு தொடர நினைக்கும் ஒருவருக்கு இணையதள அறிவு இல்லாத நிலையில் எப்படி நீதிமன்றத்தை அணுக முடியும். வழக்கறிஞர்களில் சிலருக்கே இன்னும் இது பற்றிய தெளிவு கிடைக்கவில்லை. அதனால், வழக்கு பதிவு எப்படி செய்வது என மாவட்ட நீதிமன்றங்களில் செயல்படும் சங்கங்கள் மூலமாக விழுப்புணர்வை ஏற்படுத்தலாம். நீதிமன்றங்களில் செய்யப்படும் முறையீடுகள் அவசர வழக்காக பதிவு செய்வதில் சிரமம் ஏற்படும்.
உரிய கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல், இணையதள வழக்கு பதிவு முறை அமல்படுத்தப்பட்டால், வழக்கறிஞர் மட்டுமல்லாமல் வழக்கு தொடர்ந்தவரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சரியான ஆவணங்கள் இல்லாமல் வழக்குகள் தீர்வு காண நீண்டகாலம் ஏற்படலாம்" என்று தெரிவித்தார்.
கரோனா காலங்களில் இணையவழி சேவைக்கு தற்காலிகமாக மாறினாலும், மரங்களின் அழிவு மற்றும் எதிர்கால தண்ணீரின் தேவையை கருத்தில் கொண்டு நாம் இணைய வழி சேவைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதே நிதர்சனமான உண்மை.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் 44 ஆயிரத்து 84 காலியிடங்கள் - மாணவர் சேர்க்கை குழு அறிவிப்பு..!