சென்னை: அரசு அலுவலகம், அரசு அலுவலர்கள் மீது எழும் லஞ்ச புகார்களின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்துவது, வழக்குப்பதிவு செய்வது, கைது நடவடிக்கை எடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் 2019ஆம் ஆண்டு மட்டும் 392 வழக்குகளைத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து 2020ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக அரசு அலுவலகங்கள் திறக்கப்படாததால், லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடுகள் பெரிதாக இல்லை. அந்த ஆண்டின் பிற்பகுதியில் கரோனா குறைந்து தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டவுடன் அரசு அலுவலகங்கள், அரசு அலுவலர்களின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆண்டு முழுவதும் 298 வழக்குகள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதிவுசெய்யப்பட்டது.
இருந்தாலும் 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 24 விழுக்காடு குறைவாகவே இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் இந்தாண்டு தொடக்கத்தில் உருமாறிய கரோனா உச்சத்திற்குச் சென்றதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் ஓரளவு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் முழுவீச்சுடன் செயல்பட்டு 350 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.
குறிப்பாக இந்தாண்டு ஐந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வழக்குப்பதிவின் எண்ணிக்கை 17 விழுக்காடு அதிகரித்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு ஒப்பிடும்போது மிகக் குறைவாக இருப்பதாகத் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேர் பாதிப்பு.. அதிவேகத்தில் பரவும் கரோனா!