சென்னை: சைதாப்பேட்டை பனகல் மாளிகையிலுள்ள சுற்றுச்சூழல் துறை அலுவலகம், சுற்றுச்சூழல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் பாண்டியன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் காட்டப்படாத 88 ஆயிரத்து 500 ரூபாயும், வங்கிக் கணக்கு புத்தகமும் சிக்கின.
மேலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பாண்டியன் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாண்டியன் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவுசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமம் திலகர் தெருவிலுள்ள பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு ரொக்கமாக ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய், மூன்று கிலோ தங்கம், 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களைப் பறிமுதல்செய்தனர். பல மடங்கு சொத்துகளை பாண்டியன் முறைகேடாகக் குவித்தது தெரியவந்ததால் உடனடியாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
சொத்துக்குவிப்பு
பின்னர் பறிமுதல்செய்யப்பட்ட சொத்துகளின் ஆவணங்களைத் திரட்டும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு, பாண்டியன், அவரது மனைவி லதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் 2000 முதல் 2020ஆம் ஆண்டுவரை பாண்டியன் வேலை செய்துவந்ததும், இந்தக் காலகட்டங்களில் முறைகேடாகச் சட்டத்திற்குப் புறம்பாக பாண்டியன் அவரது பெயரிலும் மனைவி லதா பெயரிலும் வருவாய் சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2013 முதல் 2020ஆம் ஆண்டு காலகட்டங்களிலேயே பாண்டியன் முறைகேடாக வருவாய் ஈட்டியது தெரியவந்தது. 2013ஆம் ஆண்டுவரை பாண்டியனின் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு 21 லட்சத்து 25 ஆயிரத்து 350 ரூபாய் இருந்ததாகவும், 2013 முதல் 2020ஆம் ஆண்டு வரைக்குள் ஆறு கோடியே 18 லட்சம் ரூபாய் முறைகேடாக பாண்டியன் சொத்துகள் குவித்ததும் தெரியவந்தது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை
மேலும், 2013 முதல் 2020ஆம் ஆண்டுவரை பாண்டியனின் வருமானம், பிற வருவாய் மூலம் கிடைத்த தொகையின் மதிப்பு 73 லட்சம் ரூபாய். ஆனால் செலவு செய்த தொகை மட்டுமே ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் எனத் தெரியவந்தது.
குறிப்பிட்ட காலகட்டங்களில் பாண்டியன் குடும்பத்தினர் ஐந்து கோடியே 97 லட்சம் ரூபாய் சொத்துகளும், ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பதும் தெரியவந்தது. பாண்டியன், அவரது குடும்பத்தினர் முறைகேடாக ஏழு கோடியே 15 லட்சம் ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருப்பது தெரியவந்தது
இதையடுத்து பாண்டியன், அவரது மனைவி லதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஐசிஎப் முன்னாள் தலைமை பொறியாளரிடம் இருந்து மேலும் ரூ. 4.28 கோடி பறிமுதல்