சென்னை: செங்குன்றத்தைச் சேர்ந்தவர், மின்வாரிய ஒப்பந்ததாரர் கிருஷ்ணகுமார். இவர் தனது செம்புகுட்டி அசோசியேஷன் என்ற மின் நிறுவனத்தின் ஏ கிரேட் லைசன்ஸை புதுப்பிப்பதற்காக கிண்டியில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர்களுக்கான லைசென்ஸ் வழங்கும் பிரிவு அலுவலகத்தில் கடந்த மே 5ஆம் தேதி விண்ணப்பத்திருந்தார்.
இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து கடந்த 10ஆம் தேதி கிண்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து தனது லைசன்ஸ் புதுப்பிப்பது தொடர்பாக அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது தயாராகிவிட்டது, அதை கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கண்காணிப்பாளர் ஸ்ரீதரை அணுகியபோது, தனக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தந்துவிட்டு வரும் 14ஆம் தேதி வந்து வாங்கிக் கொள்ளுமாறு அவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதனையடுத்து கிருஷ்ணகுமார் 14ஆம் தேதி வந்து தன்னால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகத் தர இயலாது என கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு, ஆகஸ்ட் 16 அல்லது 17ஆம் தேதி வந்து 3 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு புதுப்பிக்கப்பட்ட லைசென்ஸை பெற்றுச் செல்லுங்கள் என கண்காணிப்பாளர் ஸ்ரீதர் கூறியுள்ளாதாக கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணகுமார் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அணுகி புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்பாட்டின்படி ரசாயன பவுடர் தடவிய 3,000 ரூபாய் ரொக்கத்தை கிருஷ்ணகுமார் நேற்று மாலை கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்காணிப்பாளர் ஸ்ரீதரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு, இதேபோல எத்தனை பேரிடம் லஞ்சம் பெற்றுள்ளார் என்ற பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.