சென்னை: திமுகவின் ஓராண்டு கால ஆட்சி குறித்து மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்கும்போது கரோனா இரண்டாவது அலை உச்ச கட்டத்தில் இருந்தது. முதலமைச்சர் கரோனாவை சிறப்பாக கையாண்டார்.
கரோனாவில் இருந்து முதலில் மீண்ட மாநிலம் தமிழ்நாடுதான். இதற்கு முதலமைச்சரும் அவர் நியமனம் செய்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் தான் முக்கியக்காரணம். இதேபோன்று புயல், வெள்ளம் வந்தபோதும் ஒன்றிய அரசு உதவி செய்யவில்லை. அலுவலர்களை மட்டும் வைத்து ஆய்வு செய்து நிதி எதுவும் தரவில்லை. அத்தகைய கடுமையான நிதி நெருக்கடியில் 70 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளனர்.
முடிந்த அளவிற்கு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளனர் அல்லது அது குறித்தான அரசாணையில் கையெழுத்து போட்டுள்ளனர். நிதி நெருக்கடி இருக்கும் நேரத்தில் ஒரு சில திட்டங்களுக்கான அரசாணை வெளியிட்டு, நடைமுறைக்கு வரவில்லை. அதை செயல்படுத்த சில மாதங்களாகும். அதை இந்த அரசு கண்டிப்பாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க சுமார் 68ஆயிரம் கோடி ரூபாயில் 132 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதனால் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்ற சூழ்நிலையை முதலமைச்சர் உருவாக்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் புதிதாக இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை அறிமுகம் செய்துள்ளனர்.
குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக 6 முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கொண்டு வந்துள்ளனர். முத்திரையை பதிக்கும் முயற்சியில் முதலமைச்சர் இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு "செல்லூர் ராஜூ" - அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் - சிரிப்பால் அதிர்ந்த பேரவை