சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையின் இன்றைய நிகழ்வில், செங்கல் தயாரிப்புக்குத் தேவையான மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டியது குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம் (அதிமுக), ரூபி மனோகர் (காங்கிரஸ்) மற்றும் கோ.தளபதி (திமுக) ஆகியோர் பேசினர்.
அப்போது மண் எடுப்பதற்கு அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால், அதை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து இதற்கு பதில் அளித்துப் பேசிய நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே, முதலமைச்சரிடம் மண்பாண்டத் தொழிலாளர்கள், மண் எடுப்பதற்கான அனுமதி வழங்க கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பின்பு, இந்த விவகாரம் தொடர்பாக எத்தனை முறை சங்கத்துடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருப்பேன் என்று கணக்கிட முடியாது. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பாதல், நிர்வாகிகளிடம் ஆலோசித்து சில திட்டங்களை வகுத்து இருக்கிறோம்.
மண்பாண்டம் செய்பவர்களுக்கு 800 மாட்டு வண்டிகள் வரை இலவசமாக மண் எடுத்துக்கொள்ளலாம். மேலும், 60 மீட்டர் வரை ஒரு இடத்தில் மண் எடுக்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சில இடங்களை சீர்திருத்தம் செய்யும்போது, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி மண் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல வகைகளில் மண் எடுப்பதற்கு அனுமதி இருந்தாலும், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்குவதில்தான் பிரச்னை வருகிறது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர் அனுமதி வழங்காததால், கடந்த காலங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்காமல் போனது. தற்போது இந்த மூன்று மாவட்டங்களிலும் மண் எடுக்கலாம் என்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கனிம வள கூடுதல் இயக்குநரிடம் அனுமதி கொடுத்தாலே போதும் என்ற முறையை எளிமைப்படுத்தி கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள விணணப்பங்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து, உடனுக்குடன் அனுமதி வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் செங்கல் உற்பத்தியினை அதிகரிக்கவும், செங்கல் விலையைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக இன்று நடைபெற்ற பேரவையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாகவும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, கே.பி.முனுசாமி, வேல்முருகன் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இதையும் படிங்க: "சட்டசபைக்கு நான்தான் தலைவர், அதற்கு பெயர் தான் அவை முன்னவர்" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்