சென்னை: குமரிக்கடல், தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகக் கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததுள்ளது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அண்ணாநகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டரல், சேத்துப்பட்டு, கிண்டி, ராயப்பேட்டை, ராயபுரம், தி.நகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான, தாம்பரம், முடிச்சூர், அம்பத்தூர், அயப்பாக்கம், ஆவடி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
மழை நீர்த் தேக்கம்: காலை முதலே பெய்து வரும் மழையால் சென்னையில் பல்வேறு இடங்களிலும், பள்ளமான சாலைகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக நுங்கம்பாக்கம், ஜெமினி மேம்பாலம், ராயபுரம், பட்டாளம், நெல்சன் மாணிக்கம் சாலை, கத்திப்பாரா, கிண்டி என நகரின் சில பகுதிகளில் மழை நீரானது தேங்கியது.
போக்குவரத்து நெரிசல்: சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, 100 அடிச் சாலை, காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா சாலை, ஈ.வே.ரா பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, உத்தமர் காந்தி சாலை என நகரின் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சாலையில் தேங்கிய மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் அப்புறப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 16 சுரங்கப் பாதைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதேபோல், கென்னடி தெரு மற்றும் மசூதி தெருவில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் பதிவான மழை அளவு: டி.ஜி.பி.அலுவலகத்தில் 9 செ.மீ., மழையும், தண்டையார்பேட்டை, அயனவாரம், ராயபுரம், ஆகிய பகுதிகளில் 7 செ.மீ., மழையும், மணலி, ஐஸ் ஹவுஸ், சோழிங்கநல்லூர், அண்ணாநகர் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் 6 செ.மீ., மழையும் மேலும் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் 1 செ.மீ., முதல் 5 செ.மீ., வரை மழையானது பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க: "பி.சுசீலாவின் குரலில் மயங்கியவர்களில் நானும் ஒருவன்" - பாட்டு பாடி பாராட்டிய முதலமைச்சர்