கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை பகுதியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத வழக்கில் கடன் வாங்கியவரின் தந்தையை தாக்கிய இரண்டாம் நிலை காவலரை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஆலாங்கொம்பு தண்ணீர் தடம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (47). இவரது மகன் கார்த்திக் சிலரிடம் கடனை வாங்கி விட்டு திருப்பி தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே கார்த்திக்குக்கு கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து கடனை திருப்பித் தருமாறு கேட்டனர். கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வரும்போது கார்த்திக் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. எனவே, அவரது தந்தை வேல்முருகனிடம் உங்கள் மகன் வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அதற்கு வேல்முருகன், ‘என் மகன் கார்த்திக் வீட்டுக்கு வருவதில்லை. கடன்வாங்கியது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது,' எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார். இதனால் கார்த்திக்கிடம் கடன் கொடுத்தவர்கள் இது குறித்து சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கு; பழைய சட்டப்படி விசாரிக்க தயாநிதி மாறன் தரப்பு வாதம்!
புகாரை அடுத்து சிறுமுகை காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித் மற்றொரு காவலர் உடன் விசாரணைக்காக கார்த்திக்கின் வீட்டுக்கு சென்றனர். கார்த்திக் வீட்டுக்கு இல்லாததால் அவர் தந்தை வேல் முருகனை விசாரணைக்காக சிறுமுகை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.
மகன் வந்ததும் வரச் சொல்கின்றேன் என்று கூறிய அவர், காவல் நிலையத்துக்கு வர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித் வேல்முருகனை அடித்தும், பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான நிலையில் அந்த காட்சி சமூக வலை தளங்களில் வைரலானது. இதையடுத்து இரண்டாம் நிலையில் காவலர் ரஞ்சித்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்