சென்னை: ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் குமரன். இவர் தனது குடும்பத்துடன் மதுரவாயல் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 4) டிஎஸ்பி குமரனின் மகன் லோகேஷ், தனது தாயை ஊருக்கு அனுப்புவதற்காக, தனது தந்தையின் அரசு வாகனத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தாயை இறக்கிவிட்ட பின்னர், வீட்டிற்குத் திரும்பி உள்ளார்.
அப்போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாகச் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது அவர் மோதியுள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த, சம்பவம் குறித்து தகவலறிந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், அரசு வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிஎஸ்பியின் மகனும், கல்லூரி மாணவரான லோகேஷை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், விபத்தில் சிக்கிய அந்த பெண் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த அமிர்தா (30) என்பதும், பெருங்குடியில் தனியார் வங்கியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. நேற்று அதிகாலை (மார்ச் 4) அமிர்தா வெளியே சென்றுவிட்டு வரும் போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமிர்தா இன்று (மார்ச் 5) காலை உயிரிழந்தார். இதனால் விபத்தை ஏற்படுத்திய லோகேஷ் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மனித உயிருக்குத் தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும், அரசு வாகனத்தைச் சொந்த தேவைகளுக்காகப் பயன்படுத்தியதற்காக டிஎஸ்பி குமரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, டிஎஸ்பியின் மகன் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு - யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு