சென்னை, பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் செயல்பட்டுவரும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அலுவலக உதவியாளர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
ஓட்டேரியைச் சேர்ந்த இந்த நபர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், இவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தனர். மேலும் இவருக்கு ஏற்கனவே இருதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவை இருந்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
பள்ளி கல்வித் துறையில் பணிபுரிந்த ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதால் அங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து பேசிய மருத்துவர்கள் இறந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு முதலில் பரிசோதனை செய்யப்படும் என்றும் வேறு யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அவர்களும் முன்வந்து பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : சென்னையில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை - பொதுமக்கள் பீதி