சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும் (பிப்.25), நாளையும் (பிப்.26) வறண்ட வானிலை நிலவக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 27,28ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மார்ச் 1ம் தேதி வறண்ட வானிலை நிலவும்" என கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 36.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 36 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையத்தில் 35.2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. குறைந்த பட்ச வெப்பநிலையாக கொடைக்கானலில் 21.6 டிகிரி செல்சியஸ், குன்னூரில் 22.4 டிகிரி செல்சியஸ், உதகமண்டலத்தில் 24.8 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வறண்ட வானிலை குறித்து குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், "இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும். பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படும். இரவு நேரங்களில் காற்றின் வேகம் குறைவாக காணப்படுகிறது. இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். அதன் மூலம் பனியின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.