ஆந்திரா மாநிலத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரும் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வேனில், கஞ்சா கடத்தப்படுவதாக, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போது 187 கிலோ கஞ்சா பொருள் கிடைத்தன. இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராமசிவா மற்றும் வந்தலா முரளி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் கரோனா வைரஸ் காரணமாக, தமிழ்நாடு சிறையில் சிறிய குற்றங்கள் செய்து தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை பிணையில் வெளியே அனுப்பி வருகின்றனர். அந்தவகையில் ராமசிவாவும், வந்தலா முரளியும் தங்களையும் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். அவர்களால் சமூகத்தில் குற்றம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறி, அம்மனு ரத்து செய்யப்பட்டது. ஆனால், இவர்கள் கடந்த 4ஆம் தேதி சிறைக்காவலர் குணசேகரின் கவனக்குறைவால் சிறையில் இருந்து பிணையில் வெளியே அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் இதனைப் பற்றி அறிந்த சிறை நிர்வாகம், ராமசிவா மற்றும் வந்தலா முரளி ஆகியோரை உடனடியாகப் பிடித்து சிறையில் அடைக்க தனிப்படை அமைத்தனர். இதனையடுத்து தனிப்படை அவர்களது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் வருவதை அறிந்து ராமசிவா மற்றும் வந்தலா முரளி நரசிங்கப்பட்டினம் என்னும் இடத்தில் பதுங்கி இருந்தனர். இருப்பினும் இருவரையும், காவல் துறையினர் கடந்த 9ஆம் தேதி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
மேலும் இவர்கள் இருவரும் சென்னை - ரெட்ஹில்ஸ் வரை நடந்து சென்று லாரி மூலம் தடா பகுதிக்குச் சென்று, அங்கிருந்து நரசிங்கப்பட்டினத்திற்குச் சென்றது தெரியவந்தது. இவர்கள் தற்போது பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காய்கறி வாகனத்தில் கடத்த முயன்ற குட்கா பொருள்கள் பறிமுதல்!