சென்னை: வெளிநாடுகளில் இருந்து பார்சல்கள் மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலைய சரக்கு பிரிவுக்கு வந்த பார்சல்களை சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர சோதனை செய்தனர்.
சோதனையில் நெதர்லாந்திலிருந்து, ஆந்திராவைச் சேர்ந்த நபருக்கு வந்த பார்சலில் வாழ்த்து அட்டை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. அதன் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அலுவலர்கள் பார்சலைப் பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 10 பச்சை நிற எம்டிஎம்ஏ வகையைச் சார்ந்த போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
வெளிநாட்டு முகவரியில் கடத்தல்
மேலும் அதே பார்சலில் 7 கிராம் அளவுக்கு மெத்கிரிஸ்டல், ஒரு கிராம் ஆம்பத்டமைன் வகையைச் சேர்ந்த போதைப்பொருள்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோன்று நெதர்லாந்திலிருந்து வந்திருந்த மற்றொரு பார்சலில் 261 எம்டிஎம்ஏ வகையைச் சார்ந்த போதைமாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
அதேபோல் அமெரிக்காவில் இருந்து, ஆந்திராவில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட பார்சலில் 132 கிராம் கஞ்சா இருப்பதை சுங்கத்துறை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். இதே பாணியில் ஸ்பெயினிலிருந்து விளையாட்டு பொருள்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த பார்சலில், 10 கிராம் எடையுள்ள கஞ்சா கடத்தியது தெரியவந்தது.
தற்போது இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சுங்கத்துறையினர், வெளிநாடுகளில் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவற்றை கடத்திய போதை ஆசாமிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாமக பிரமுகர் கொலை வழக்கு - தேடப்பட்டுவந்த நான்கு குற்றவாளிகள் கைது