திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்ட காலம் (50 ஆண்டுகள்) தலைவராக இருந்தவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "‘மாண்மிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்த கருணாநிதியின் பிறந்த நாள் பெரு விழா, முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க, கரோனா தொற்று பரவல் காரணமாக, ஆங்காங்கே உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது.
கருணாநிதி - கலங்கரை வெளிச்சம்
கருணாநிதி உருவத்தால் மறைந்தாலும், உணர்வுடன் திராவிட இனத்தோடு என்றும் வாழ்பவர். பெரியாரின் ‘ஈரோட்டுக் குருகுலம்‘, அண்ணாவின் காஞ்சி அரசியல் பள்ளி, அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் வற்றாத பாச மழை. இவைகளால், கொள்கையால், உரிமைப் போராட்டமாய் என்றும் திராவிடத்தின் திசை மாறாமல் நடத்திச் செல்லும் கழகக் கலங்கரை வெளிச்சம் அவர்!
கருணாநிதி வாழ்கிறார்; ஆளுகிறார்!
அவர் உடலால் மறைந்தவுடன், சிலர் தமிழ்நாட்டில் ‘வெற்றிடம்‘ என்று பார்வை தடுமாறி பதவியில் அமரத் துடித்தவர்களைப் பக்குவமாக ஒதுக்கியதோடு, இது வெற்றிடம் அல்ல; மற்றவர் வந்து தெரிந்து, தெளிந்து செல்ல வேண்டிய ‘கற்றிடம்‘ என்பதைக் காட்டும் வண்ணம் கருணாநிதியின் கழகக் களத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட நம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதியின் உழைப்பை, ஆளுமை ஆற்றலை அப்படியே பெற்று, இன்று அனைவரது பாராட்டையும் பெற்று, அடக்கத்திலும், ஆளுமையிலும், அசாதாரண சாதனையிலும் சரித்திரம் படைத்து, அதனையே தனது அர்ப்பணிப்பு மிக்க மலர்வளையமாக்கி, வேதனைகளைச் சாதனைகளாக்கி வென்று காட்டி நாளும் உயர்ந்து வருகிறார் என்றால், அதன் உண்மைப் பொருள் கருணாநிதி வாழ்கிறார், கருணாநிதிதான் ஆளுகிறார். ‘திராவிடம் வெல்லும்‘ - என்றும்! இதை வீழ்த்த நினைப்போர் வீழ்ந்து விட்டார்கள் என்ற வீர வரலாற்றினை எழுதத் தொடங்கிவிட்டார் - 27 நாட்களின் ஆட்சியிலேயே!
கருணாநிதிக்கு மாலை சூட்ட வேறு சான்று தேவையா?
இதைவிட, கருணாநிதியும், கழகமும், திராவிடமும், கடமையும், உரிமையும், வாய்மைப் போரும் எங்களது வெற்றிகளாக நாளும் பளிச்சிடும் என்று காட்டவும், கருணாநிதிக்கு மாலையாகச் சூட்டவும் வேறு சான்று தேவையா? ஈரோட்டுக் குருகுலப் பயிற்சி பல தலைமுறைகளைக் களத்தில் இறக்கி, வெற்றி வாகை சூடிடும் வரலாற்றைப் படைத்துக் காட்டும் உறுதியைப் புதுப்பித்துக் கொள்ளும் அவரது பிறந்த நாளில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தடுப்பூசி - அரசியல் வியாதிகளை விரட்டி, பொற்கால ஆட்சி பூத்துக் குலுங்கிடும் மாண்பை உணர்த்திட உறுதி ஏற்போம்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'போராளியின் வழியில் வெற்றிப் பயணம்' - கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை