சென்னை: உலக பார்வை தினம் 2023 அனுசரிப்பின் ஒரு பகுதியாக, டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் அகர்வால்ஸ் பார்வை அளவியல் கல்வி நிறுவனம், கண் பராமரிப்பு மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு தொண்டு நிறுவனமான இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் (IVI) உடன் இணைந்து, தனித்துவமான ஒரு நிகழ்வை இன்று (அக்.08) அரங்கேற்றியது.
சென்னை எலியட்ஸ் கடற்கரையில், கண் கண்ணாடி உருவத்தை மனிதர்களின் பங்கேற்புடன் நேர்த்தியான வகையில் மனிதர்களை கொண்டு உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் அதிகமான நபர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
மேலும், வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகள், கண் மருத்துவர்கள், மாணவர்கள், பார்வைத்திறன் பாதிப்புள்ளவர்கள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இம்முயற்சியில் தங்களது பங்களிப்பை வழங்கினர். இந்த நிகழ்வில், சென்னை கிழக்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சமாய் சிங் மீனா தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சென்னை மாநகரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடிமக்கள், தங்கள் கண்களை துணியால் கட்டிக்கொண்டு பங்கேற்ற நடைப்பயிற்சியும், இந்நிகழ்வின் ஒரு அங்கமாக நடைபெற்றது. குருட்டுத்தன்மை வராமல் தடுப்பதற்கான சர்வதேச முகமையின் (International Agency for the Prevention of Blindness-IAPB) ஆதரவோடு நடத்தப்படும் உலக பார்வைத்திறன் தினம், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அன்று உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.
பணியமைவிடங்களில் கண்களது பார்வைத்திறன் ஆரோக்கியத்தை கவனமுடன் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ‘பணியில் உங்களது கண்களை நேசியுங்கள்’ என்ற கருத்தாக்கம் இந்தாண்டு உலக பார்வைத்திறன் தின அனுசரிப்பின் கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து, டாக்டர் அகர்வால்ஸ் பார்வை அளவியல் கல்வி நிறுவனத்தின் முதல்வர் கற்பகம் பேசும்போது, “பார்வைத்திறன் குறைபாடு அல்லது பார்வையின்மையோடு உலகெங்கிலும் 2.2 பில்லியன் நபர்கள் வாழ்ந்து வருகின்றனர் எனத் தெரிகிறது. இத்தகைய நிலைக்கு கண்புரை நோய் மற்றும் சரிசெய்யப்படாத ஒளிக்கதிர் விலக்க குறைபாடுகள் என்பவையே இரு முக்கிய காரணங்களாக, முறையே 40 சதவீதம் மற்றும் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை கொண்டிருக்கின்றன.
ஆனால் பார்வைத்திறன் பாதிப்பு நிலைகளுள் 80 சமவீதத்திற்கும் அதிகமான நேர்வுகள், ஏற்படாமல் முன்தடுக்கப்பட கூடியவை அல்லது உரிய கால அளவிற்குள் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்பட கூடியவையாக இருக்கின்றன.
பார்வைத்திறன் ஆரோக்கியம் என்பது அடிப்படையான மனித உரிமைகளுள் ஒன்றாகும். பணியாற்றும் அல்லது தொழில் செய்யும் இடங்களில் இருக்கும்போது, தங்களது கண்களை மக்கள் எப்படி கவனத்துடன் பராமரிக்கின்றனர் என்பதையே இது பெரும்பாலும் சார்ந்திருக்கிறது” என தெரிவித்தார்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கருவிழி படலம் மற்றும் ஒளிக்கதிர் விலக்க அறுவைசிகிச்சை நிபுணர் ரம்யா சம்பத் கூறுகையில், “மொபைல்கள், கணினிகள் அல்லது லேப்டாப்கள் போன்ற டிஜிட்டல் துறை சார்ந்த சாதனங்களின் நீண்டநேர பயன்பாடு, பணியாளர்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வழிவகுத்திருக்கின்றன.
20-20-20 என்ற விதியை கடைப்பிடிப்பது மிகப்பெரிய அளவிற்கு கண்களில் அழுத்தமும், பிரச்சனைகளும் ஏற்படுவதை குறைக்கக்கூடும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வையை இத்தகைய சாதனங்களின் திரைகளிலிருந்து அகற்றுவது, 20 நொடிகள் நேரத்திற்கு 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளை உற்றுநோக்குவது என்பதே இந்த விதி.
கண்கள் உலராமல் தடுப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 14 தடவைகள் கண்களை சிமிட்ட வேண்டும். வீடுகள், அறைகளுக்கு வெளியே ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் செலவிடுவதும் மற்றும் சூரிய ஒளி அதிகமாகவுள்ள நாட்களில் குளிர் கண்ணாடிகளை அணிவதும் முக்கியம்.
தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுகளை உண்பது, புகைப்பிடிப்பதை கைவிடுவது ஆகிய நடவடிக்கைகள், கண்களின் பார்வைத்திறன் ஆரோக்கியம் உட்பட நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆதித்யா எல்1 விண்கலத்தின் தற்போதைய நிலை என்ன? இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்