சென்னை: சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் மகேஷ்வரி நகர் பகுதியைச்சேர்ந்தவர் கட்டட வேலை செய்து வரும் வரபிரகாசம்(55). இவரது மனைவி கூலி வேலை செய்து வந்த விஸ்வாசமேரி(50), இவர்களுக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர்.
வரபிரகாசம் தொடர்ந்து விஸ்வாசமேரி வேலை செய்துவிட்டு வீட்டுக்கு தாமதமாக வரும்போது அவர் நடத்தையின் மீது சந்தேகம் அடைந்து, தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம்போல், வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய விஸ்வாசமேரியிடம் மது போதையில் இருந்த வரபிரகாசம் யார்கூட ஊர் சுற்றிவிட்டு வருகிறாய் என கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த வரபிரகாசம் படுக்கை அறையில் படுத்து இருந்த மனைவி விஸ்வாசமேரியை அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதையடுத்து வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் தாய் இறந்து கிடந்ததைப் பார்த்த அவரது மகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிட்லப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சிட்லப்பாக்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வரபிரகாசத்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் அருகே கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் - பத்திரப்படுத்தி போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்