சென்னை: மாதவரம் கோகினூர் சாலை வி.ஜி.என் நகரில் வசிப்பவர், தங்கராஜ்(27). இவர் தனது மனைவியுடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை இவரது வீட்டிற்கு பிளிப்கார்ட்டில் இருந்து வந்த பெண் ஒருவர், உங்களுக்கு பார்சல் ஒன்று வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு தங்கராஜ் நாங்கள் எந்த பொருளும் ஆர்டர் செய்யவில்லை என்று கூறியும், இதனை ஏற்காத அந்த பெண்மணி ரூ.1,536 ஜிபேயில் செலுத்தி பார்சலை பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியதால், தங்கராஜ் வேறு வழியின்றி பணத்தை செலுத்தி பார்சலை பெற்றுக்கொண்டார்.
பின்னர், அந்த பெண்மணி முன்பு பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் 3 செங்கல் துண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, இதுகுறித்து டெலிவரி செய்த பெண்ணிடம் கேட்டதற்கு தனக்கு ஒன்றும் தெரியாது என்றும்; மாதவரத்தில் உள்ள பிளிப்கார்ட் அலுவலகத்தில் சென்று கேட்கும்படி கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
உடனே தங்கராஜ் புறப்பட்டு சென்று மாதவரத்தில் உள்ள பிளிப்கார்ட் அலுவலகத்திற்கு தாங்கள் எந்த ஆர்டரும் செய்யவில்லை எனவும்; தங்கள் ஊழியர் வலுக்கட்டாயமாக கொடுத்து ரூ.1,536 பெற்று சென்றுள்ளார் எனவும் முறையிட்டுள்ளார். மேலும், பார்சலில் செங்கல் துண்டு உள்ளது எனவும்; ஆகையால், தங்கள் பணத்தை திருப்பி அளிக்குமாறும் கேட்டுள்ளார்.
அதற்கு ஊழியர்கள் பணத்தை திருப்பித் தரமுடியாது என்றும், தகாத வார்த்தையால் தங்கராஜை திட்டி அனுப்பினர். இதனால் பாதிக்கப்பட்ட தங்கராஜ் பிளிப்கார்ட் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:Video Leak - சைவக்கடையில் சிக்கன் ரைஸ் கேட்டு போதையில் தகராறு செய்த காவலர்கள்!