கடந்த ஒரு மாத காலமாக உலகையே அச்சுறுத்திவரும் கோரோனா வைரஸுக்கு இதுவரை 451 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் அமெரிக்கா, இலங்கை, இந்தியா என 20க்கும் மேற்பட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கொரோனா அறிகுறி இருந்தவர்களின் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்காக புனேவிற்கு அனுப்பபட்டுள்ளதாகவும் இதுவரை மொத்தம் 21 ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டத்தில் அனைத்துமே நோய் தொற்று இல்லாதவை என்று முடிவுகள் வந்துள்ளதாவும் தெரிவித்தார்.
மேலும் மூன்று ரத்தமாதிரிகளை தற்போது சோதனைக்காக அனுப்பபட்டுள்ளதாகவும், அதன் முடிவுகளும் ஓரிரு நாளில் வந்துவிடும் எனவும், தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை எனவும், இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா குறித்து சமூக வளைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், தமிழ்நாட்டின் தட்பவெட்பநிலைக்கு கொரோனா பாதிப்பு பரவாது என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் சிகிச்சை: இரவுபகல் பாராது சேவையாற்றும் செவிலியர்!