சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஓன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ”ஊரடங்கு காரணமாக பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மாவட்ட நீதிமன்றத்தை நேரடியாக அணுகி புகாரளிக்க முடியாத நிலை உள்ளது. பாதிக்கப்படும் பெண்கள், பாதிப்புக்கு காரணமானவருடன் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் பாதிகாப்புக்காக 31 மாவட்டங்களிலுள்ள அவசர கால உதவி எண்ணில் தொடர்பு கொண்டதில் 24 மாவட்ட அலுவலர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. 7 மாவட்ட அலுவலர்கள் மட்டும் ஊரடங்கு காலத்தில் தங்களால் செயல்பட முடியாது என தெரிவிக்கின்றனர்.
தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், பாதிப்புக்கு உள்ளான பெண்கள் தரப்பில் பெறப்பட்ட 257 புகார்களில், 69 புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பானது எனவும் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் அவசர கால நடவடிக்கையாக வீடியோ கான்பரன்ஸிங்கில் பாதிக்கப்படும் பெண் நேரடியாக மாவட்ட நீதிமன்றங்களை அணுக ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல, தமிழ்நாடு அரசும் மாவட்ட பாதுகாப்பு அலுவலர்ககளின் தொலைபேசி எண்கள், அவசர கால எண்களை செய்தித்தாள்கள் மூலமாக வழங்கலாம். பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க காலல் துறைக்கும் உத்தரவிட வேண்டும்'’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 19) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'ஊரடங்கால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு' - ஏடிஜிபி ரவி