2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் சட்டப்பேரவைத் தேர்தலின் பரப்புரையை திருச்சிராப்பள்ளியில் நேற்று (டிசம்பர் 27) மூன்றாம் கட்ட பரப்புரையை தொடங்கினார்.
திருச்சி பரப்புரையில் பேசிய கமல்ஹாசன், "நல்லவர்களைத் தாக்கும் நோயாக ஊழல் உள்ளது. வாக்குச்சாவடியில் ஊழலை தடுப்பது உங்கள் கையிலுள்ளது. அதனை நோக்கி அதிதீவிரமாக, அதிவேகமாக நடைபோடும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் உள்ளது" என்றார்.
எம்ஜிஆர் ஆட்சி = கமல்ஹாசன் ஆட்சி
தொடர்ந்து அதிமுக அரசை கடுமையாகச் சாடிவரும் கமல்ஹாசன், எம்ஜிஆர் ஆட்சியைத் தன்னால் மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துவருகிறார். நான் எம்ஜிஆரின் நீட்சி என எங்கும் பேசுவேன், எப்போதும் தைரியமாகப் பேசுவேன் என்றும் எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான் என்றும் கமல்ஹாசன் தொடர்ந்து கூறிவருகிறார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இதுகாறும் 'அம்மா ஆட்சி' என்றே முழங்கிக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் புரட்சித் தலைவரின் பெயரைப் புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார். நீங்கள் காட்டுவீர்களா? என்றும் ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்ஜிஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?!" என்று அதிமுக அரசை நோக்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் 136ஆவது தொடக்க நாள் இன்று