சென்னை: திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த தீர்ப்புகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து உள்ளார்.
இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "சிறப்பு நீதிமன்றங்களால் முடிக்கப்பட்ட சில வழக்குகளை தேர்ந்தெடுத்து விசாரணைக்கு எடுப்பதாகவும், 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை டெண்டர்களில் முறைகேடு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மறு விசாரணை நடத்துவது, நேரத்தை வீணடிப்பதாக உள்ளது" என கூறியிருந்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சந்திப்பு.. பெங்களூரு விரைந்தார் பிரதமர் மோடி!
ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேட்டி குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டுமென நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி முறையிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "நீதிபதியாக பதவி ஏற்றதற்கான சட்டப்படியான கடமையையே செய்துள்ளேன். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் எது வேண்டுமானாலும் சொல்வார்கள். அதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. அதனை கருத்தில் கொள்ளவும் இல்லை. ஆர்.எஸ்.பாரதியின் பேட்டியை தான் பார்த்தேன், அதை பார்த்து நிலை தவறினால், நான் நீதிபதியாக இருக்கும் திறமையை இழந்தவனாகி விடுவேன்" என்று கூறி உள்ளார்.
மேலும் இதுபோன்ற கருத்துகளில் விருப்பு வெறுப்பற்று இருப்பதாகவும், ஆனால் தைரியமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு, ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை தனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக, வழக்கறிஞருக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருநெல்வேலி, பாளையம் கால்வாய்களில் கழிவுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!