கரோனா பரவலைத் தடுக்க அதிக மருத்துவர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில், மாநிலப் பொதுச் செயலாளர் ரவிசங்கர் ஆகியோர் கூறியதாவது, "தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்த சூழ்நிலையில் தினமும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. தற்போது கரோனா அதிகரித்து வருவதால் முன்களப்பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது.
இந்நிலையை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் ஏற்கெனவே அரசிடம் போதிய மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.
இதனால், 2ஆயிரத்து100 மருத்துவர்களை கரோனா தடுப்புப் பணிக்காக மாதம் 60ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆறு மாதத்திற்கு தற்காலிகமாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், கரோனா தொற்றை சமாளிக்கவும், மக்கள் நலன் காக்கவும், அரசு ஆக்ஸிஜன் படுக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் அதிகப்படுத்தி உயிர்காக்கும் அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று கரோனா தொற்றை சமாளிக்க 2ஆயிரத்து100 மருத்துவர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்தனர்.