சென்னை: அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2009இல் அரசாணை 354 மூலம் மருத்துவர்களுக்கான பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய திருத்தம் வழங்கினார்.
கடந்த 15 ஆண்டுகளாக இதை சரி வர வழங்கப்படவில்லை. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ன ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனபதை பல தரப்பட்ட போராட்டங்களை நடத்தியும், 2017 மற்றும் 2022 ல் நடத்தாமல் அரசு வஞ்சித்து வருகிறது.
இதனால் சுகாதாரத்துறையை இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக அரும்பாடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் பெரும் விரக்தியில் உள்ளனர். தங்கள் உயிரை கரோனா காயத்தில் துச்சமாக கருதி மக்களுக்கு சேவை செய்த அரசு மருத்துவர்களுக்கு உடனடியாக அரசாணை 354 மூலம் உரிய பதவி உயர்வு மற்றும் ஊதிய திருத்தம் செய்து அறிவிக்கப்பட்ட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலைய பணி நேரத்தை மாற்றி அமைத்த அரசாணை 225-யை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பொது மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு காலை 9 மணி முதல் 4 மணி வரையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும். தற்போது காலை 8 மணி முதல் நடைபெறுவதால் பொது மக்களுக்கும் பயன் அளிக்கவில்லை.
மக்கள் தங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இதர மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்கள் பல காலியாக உள்ளன. உடனடியாக அவற்றை நிரப்ப வேண்டும். இதனால் பணிச்சுமை குறைந்து மக்களுக்கு நல்ல முறையில் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும்.
அரசு மருத்துவர்கள் மருத்துவ தேர்வாணையம் மூலம் பணியில் அமர்த்தப்பட வேண்டும். மாவட்ட அளவில் தொகுப்பூதியத்தில் தற்காலிமாக பணி அமர்த்தும் நடவடிக்கையை உடனடியாக கை விட வேண்டும். சமூக நீதி பேசும் ஆட்சியில் இது நடப்பது வேதனையளிக்கிறது. கடந்த ஆட்சியின் போது தேசிய நல்வாழ்வுக் குழுமத்தின் மூலம் தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், அப்போதைய அரசு மத்திய அரசின் நிதியுதவியுடன், மாநில அரசின் நிதியையும் சேர்த்து, காலமுறை ஊதியத்தில் மருத்துவர்களை நியமனம் செய்தது. கடந்த 2005ஆம் ஆண்டில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்களை திமுக ஆட்சியில் முதல்வராக கருணாநிதி பொறுப்பெற்ற பின்னர் 2006ஆம் ஆண்டில் காலமுறை ஊதியத்தில் பணியில் சேர்த்தார்.
ஆனால், மீண்டும் திமுக ஆட்சியில் தொகுப்பூதிய அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சைக் கேட்டு நியமனம் செய்யப்படுகின்றனர். அதிமுக ஆட்சியின் போது அவுட்சோர்சிங் முறையை எதிர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது செயல்படுத்தாமல் தடுக்க வேண்டும்.
காப்பீடு திட்டம் மூலம் அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை சங்கம் எதிர்க்கிறது. தனியார் நிறுவனங்கள் போல சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இலக்கு நிரணயிக்கப்பட்டு பணம் ஈட்ட மருத்துவர்களுக்கு அழுத்தம் தரப்படுகின்றன. இது மக்களை பாதிக்கும் வகையில் அமைகிறது. மேலும் ஈட்டிய பணத்தில் சிகிச்சை சம்மந்தமான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் அந்த அந்த துறை மருத்துவர்களையே வாங்க அறிவுறுத்தப்படுகிறது.
ஆண்டுக்கு 1200 கோடிகள் தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் தொகையை மருத்துவ சேவை ஆணையம் தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்திடம் ஒப்படைத்து அரசே நேரிடையாக மருந்துகள் மற்றும் உபகரணங்களை மொத்தமாக குறைந்த விலையில் கொள்முதல் செய்து அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவையான அளவு பகிர்ந்தளிக்க வேண்டும்.
நோயாளிகளுக்கு தேவையான மாத்திரைகளை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் சம்பாதித்து வாங்கிக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். அப்படி நாங்களே எல்லாவற்றையும் செய்து விட்டால் சுகாதாரத்துறை என்பது எதற்கு என கேள்வி எழுப்பினர். காப்பீட்டு அட்டை இருந்தால் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
மாவட்ட அளவில் மருத்துவ அலுவலர்களுக்கு ஆட்சியர் தலைமையில் வாராந்திர, மாதாந்திர ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறுகிறது. உயிர் காக்கும் மருத்துவர்களை இப்படி அலைக்கழித்து நேர விரயம் செய்வது சரியல்ல. மாவட்ட துறை அலுவலர்களுடன் நடத்தி மருத்துவமனையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது போதுமானது.
மருத்துவமனைகளுக்கு நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து தரவரிசைப்படுத்தி அறிவிக்கும் போக்கு மக்களுடைய உயிருக்கு ஆபத்தாக அமையும். எனவே காப்பீட்டு நிறுவனத்திற்கு அளிக்கப்படும் நிதியை நேரடியாக மருத்துவமனைகளுக்கு அளித்து, சிகிச்சையை அளிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’’ என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போக்சோ: 7 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி; தாயகம் திரும்பியவருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!