சென்னை: அரசு சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்விற்கான அரசாணை 293-ன் படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சர்வீஸ் டாக்டர் வெல்பர் அசோசியேசன் தலைவர் சுரேஷ் கூறும்போது: பல ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சிறப்பு சிகிச்சை மற்றும் உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவர்களுக்கான அங்கீகாரம் படிப்பிற்கு ஏற்ற ஊதியமும் வழங்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால் அரசாணை 293-ன் படி அந்த சூழ்நிலையை இந்த அரசு சமீபத்தில் மாற்றி அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. இந்த அரசாணை கடந்த ஒராண்டிற்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கும், சிறப்பு சிகிச்சை மற்றும் உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவர்களுக்கும் ஊதிய விகிதத்தை கால வரையறையில் எளிதில் எட்டும் சலுகை இருக்கிறது. கர்நாடகா, கேரளா, அண்டை மாநிலங்களில் உள்ள சிறப்பு மற்றும் உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவர்களுக்கு மற்ற மருத்துவர்களை காட்டிலும் அதிக சம்பளம் தரப்படுகிறது.
தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவரின் கடின உழைப்பும் , அறிவும் சுரண்டப்பட்டு, படிப்பிற்கேற்ற ஊதியம் மறுக்கப்படும் நிலையே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலை தொடர்ந்தால் உயர் சிறப்பு மருத்துவர்கள் அரசுப் பணிக்கு வருவதற்கு விருப்பம் இல்லாமல் போவார்கள்.
அதனால் அடித்தட்டு மக்களின் சிறப்பு சிகிச்சை பாதிக்கப்படும். எனவே அரசாணை 293-ன் படி நிறைவேற்றி தர வேண்டும். காலமுறை ஊதிய முறையிலும் நீண்ட நாள் ஊதிய சலுகை கோரிக்கையினை நிறைவேற்றித் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்த திட்டம்!