சென்னை: வரும் சனிக்கிழமை (செப். 11) முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளதால் அடுத்த நாள் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் மருத்துவர்கள் பங்கேற்பதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது.
அதனால் முகாமை தள்ளிவைக்க வேண்டும் எனச் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளது.
இது குறித்து அந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, "கரோனா தடுப்புப் பணிகளிலும், தடுப்பூசி வழங்குவதிலும், கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாகப் பணியாற்றிவருகிறது. பல்வேறு தரப்பின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.
முதுநிலை நீட் தேர்வு
இந்த நிலையில் செப்டம்பர் 11ஆம் தேதி சனிக்கிழமை முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இந்தத் தேர்வை ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்கள் எழுத உள்ளனர். அவர்களுக்கான நீட் தேர்வு மையங்கள் தொலை தூர இடங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன.
அடுத்த நாள் செப்டம்பர் 12ஆம் தேதி 10 ஆயிரம் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் நீட் தேர்வு எழுதும் மருத்துவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சுகாதார நிலையங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் உடனடியாகத் திரும்புவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இந்த முகாம்களைத் திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்துவதிலும் சிரமங்கள் உள்ளன.
அதேபோல், இந்த வாரத்தின் இறுதியில் அரசு விடுமுறை நாள்கள் தொடர்ச்சியாக வருவதால் பொதுமக்களும் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விடுமுறையை குடும்பத்தினருடன் செலவிடுவர்.
அரசுக்கு கோரிக்கை
இதனால், செப்டம்பர் 12ஆம் தேதி அன்று நடத்தப்பட உள்ள தடுப்பூசி முகாம்களை, பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதில் சிரமங்கள் உள்ளன. ஆகவே தடுப்பூசி முகாம் நடத்தும் தேதியை மாற்றியமைத்து, மக்களுக்காகச் சேவை செய்யும் அரசு மருத்துவர்களின் நலனைக் காத்திடும் வகையிலும், பொதுமக்கள் முழுமையாகப் பயன்பெறும் வகையிலும் செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'செப்.12ஆம் தேதி 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்