சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம்
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு கரோனாவை சிறப்பாக கையாண்டு உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்த தகுதி உடையை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதற்காக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் தடுப்பூசி தயக்கம் (vaccine hesitancy) 7 விழுக்காடு அளவு இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆரம்பத்திலிருந்தே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தமிழ்நாட்டில் தடுப்பூசி தயக்கமும், எதிர்ப்பும், அதிகமாகவே நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி 75 விழுக்காட்டிற்கு மேல் போடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களில் பெரும்பாலோனோர் தடுப்பூசிப் போட்டுக்கொள்வதில் தயக்கமும் எதிர்ப்பு மனநிலையும், பக்க விளைவுகள் பற்றிய தவறான நம்பிக்கைகள் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
அனைத்து மதத் தலைவர்களையும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும், இளைஞர் மாணவர் அமைப்புகளையும், பெண்கள் சுயநிதிக் குழுக்களையும்,தொண்டு நிறுவனங்களையும் பயன்படுத்திட வேண்டும். அவர்கள் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை , போட்டுக்கொள்ள இணங்கச் செய்ய வேண்டும்.
மருத்துவர்களுக்கு இலக்கு
மருத்துவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிப்பதும், அதை நிறைவேற்றாதவர்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை ( Memo) அனுப்புவதும், இலக்கை நிறைவேற்ற வேண்டும் என மிரட்டும் போக்கை கடைபிடிப்பதும் சரியானதல்ல. இதனால், மருத்துவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இத்தகைய போக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
தடுப்பூசி செலுத்திட வீடு வீடாக அனைத்து வகை மருத்துவத்துறை பணியார்களையும் அனுப்புவதால், இதர கரோனா அல்லாத மருத்துவ சேவைகள் அனைத்தும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. எனவே, பயனாளிகளை முகாம்களுக்கு வரவழைத்து தடுப்பூசிகளை போட வேண்டும்.
பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை
இதை தவிர சென்னை இராஜிவ் காந்தி மருத்துவமனையைச் சேர்ந்த பெண் மருத்துவர்கள், சக ஆண் மருத்துவர்களால் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். சட்ட ரீதியாக தண்டனையை தமிழ்நாடு அரசு பெற்றுத்தர வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவ, செவிலியர் கல்லூரிகள், மருத்துவமனை நிர்வாகங்கள், மருத்துவ, செவிலிய மாணவிகள், பெண் மருத்துவர்கள், பெண் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளன. ஆணாதிக்க மனநிலையோடு அலட்சியமாக செயல்படும் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு எதிராக பரப்புரை
மேலும் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பெறுவது தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்துவருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குழந்தை பிறப்பிற்கு நல்ல நாள்,நல்ல நேரம் பார்ப்பது போன்றவையும் காரணங்களாக இருக்கின்றன.
அதேசமயம் சிசேரியன் அறுவை சிகிச்சையே தேவையற்றது. சிசேரியன் அறுவை சிகிச்சையே கூடாது என்ற பார்வையும் சரியல்ல. இந்த அறுவை சிகிச்சையை செய்யும் வசதி பரவலானதும், சிறிய மருத்துவமனைகளில் கூட செய்ய முடியும் என்ற நிலை உருவாகியிருப்பதும் அவசரக் காலத்தில் தாய்,சேய் உயிர் காத்திட உதவுகிறது.
குறைமாத,குறை எடை குழந்தைகள் பிறக்கவும்,காக்கவும் உதவுகிறது. பேறுகாலத் தாய்மார்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதம் பன்மடங்கு குறைய காரணமாகியுள்ளது.
எனவே, சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு எதிராக, அறிவியலுக்குப் புறம்பான வகையில் பரப்புரைகளை மேற்கொள்வது சரியல்ல. இது மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒப்பந்த லேப் டெக்னீசியன்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் - டாக்டர்கள் சங்கம்