சென்னை: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரப்படுத்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், மருத்துவர் ரவீந்தரநாத் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2005 ஆம் ஆண்டு முதல் R.C.H.திட்டத்தின் கீழ், தற்காலிக அடிப்படையில் 3,140 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
உழைப்புச் சுரண்டல்
அவர்களுக்கு மாதம் தோறும் மிகக் குறைவாக 1000 ரூபாய் மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிபவர்களுக்கு ரூபாய் 1,500 ஆக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது.
அவர்கள் தொடரந்து 12 மணி நேரம் பணி செய்ய வைக்கப்படுகின்றனர். இது கடுமையான உழைப்புச் சுரண்டலாகும். அரசாங்கமே இத்தகைய கடும் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது.
இந்தப் பணியாளர்களில் பெரும்பாலோர் பட்டியலின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெறும் ரூ.1000 முதல் 1500 வரை தொகுப்பூதியத்தைப் பெற்றுக் கொண்டு எவ்வாறு இவர்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும்.
இது குறைந்த பட்ச ஊதிய நிர்ணயத்திற்கே எதிராக உள்ளது. எனவே, இவர்களின் ஊதியத்தை மாநில அரசின் நிரந்தர தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்திற்கு நிகராக உயர்த்திட வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களின் சேவையின்றி நிலையங்கள் இல்லை
தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்குரிய இதர அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கிட வேண்டும். அவர்களுக்கு வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற எந்த விடுப்புகளும் வழங்கப்படுவதில்லை. அவற்றையும் வழங்கிட வேண்டும்.
R.C.H திட்டத்தின் கீழ் பணிபுரியும், இந்தத் தூய்மைப் பணியாளர்களின் சேவையின்றி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட இயலாது. அங்கு பிரசவங்களை பார்ப்பதும் இயலாது. எனவே, இந்தத் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக தமிழ்நாடு அரசு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.
இந்தப் பணியாளர்களுக்கான பணி நேரத்தை எட்டு மணி நேரம் மட்டுமே என்பதை உறுதிப் படுத்த வேண்டும். இவர்களுக்கு பணியிடங்களில் உரிய பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவதோடு, கௌரவமான முறையில் பணியாற்றும் வகையில் பணியிடச் சூழலை உருவாக்கிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய R.C.H ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் கௌரவத் தலைவர் செல்வராஜ், தலைவர் எம்.லட்சுமி, ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ‘வேளாண் சட்டப் போராட்ட வழக்குகள் ரத்து’ - முதலமைச்சர்