எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்காக தேசிய அளவில் நீட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் கிராமபுற மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்த பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று முந்தினம் (மே.23) நடத்தினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'தமிழ்நாட்டில் நீட் தேர்வு அவசியம் இல்லை என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், இந்தாண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் பலரிடம் எழுந்துள்ளது. இதுகுறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, ’’தமிழ்நாட்டில் நீட் தேர்வு தேவையில்லை என்ற தமிழ்நாடு அரசின் முடிவு வரவேற்புக்குரியது.
பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, சட்ட வல்லுநர்களை ஆலோசித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுவது அவசியமானது.
மேலும், பழைய முறைப்படி, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவர் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்கள், பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: கருப்பு, வெள்ளையை விட ஆபத்தாம் மஞ்சள் பூஞ்சை... தடுப்பது எப்படி?