வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிவர் புயல், நேற்று (நவ.24) புயலாக மாறியது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், நிவர் புயல் இன்னும் தீவிரமடையுமே தவிர பலவீனமடைய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் பாதிக்கப்படும் இடங்களில் பேரிடர் மீட்புப் பணிகளிலும், மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கவும் திமுக இளைஞரணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வங்கக் கடலில் நிவர் என்னும் புயல் உருவாகி அது தமிழ்நாடு - புதுவை கரையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் பேரில் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பரப்புரைப் பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம். நாம் ஏற்கனவே சந்தித்த கஜா, ஒக்கி, வர்தா, தானே போலவே இந்தப் புயலும் பேரிடரை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அவர்களுக்கு பேரிடர் மீட்பு, நிவாரணப் பணிகளில் இளைஞரணியினர் ஈடுபட வேண்டும். வரும் நவ.27ஆம் தேதி என் பிறந்தநாளன்று ஆடம்பரமான போஸ்டர், பேனர்கள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இளைஞரணியினர் ஈடுபட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெள்ளத்தால் சூழ்ந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடு!