சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி மாநில மாவட்ட துணை அமைப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் பிற்பகல் 3.30வரை நடைபெற்றது. கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”திமுகவின் இளைஞர் அணி கூட்டத்தில் முதல் செயல் திட்டமாக செப்டம்பர் 14 முதல் நவம்பர் மாதம் 14 ஆம் தேதிக்குள் தொகுதிக்கு 10,000 இளைஞர்கள் வீதம் 3 லட்சம் இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டுமென கூறியுள்ளேன்.
இளைஞரணியில் உறுப்பினர்களை அதிகப்படுத்த புதிதாக மொபைல் ஆப் ஒன்று தொடங்க இருக்கிறோம். முதல்முறையாக உறுப்பினர் அடையாள அட்டையில் புகைப்படம், செல்போன் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்றவற்றை பதிவு செய்யப்படுகிறது.
நான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் என்பதால் என்னிடம் நிர்வாகிகள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். இதுபோன்று பல செயல் திட்டத்தை நிறைவேற்ற நானும் இணை மற்றும் துணை அமைப்பாளர்கள் உட்பட அனைவரும் இணைந்து பணிபுரிவோம். திமுக இளைஞரணி சார்பில் முதல் பணியாக தூர்வாரப்படாத ஏரிகளை தூர்வார திட்டமிட்டுள்ளோம். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என நிர்மலா சீதாராமனின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி, மோடி ஆட்சி வாயால் வடை சுடும் ஆட்சிதான் என காட்டமாக கூறினார்.