அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் பொதிகையில், காலை 7.15 மணியிலிருந்து 7.30 மணிவரை சமஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பரிட்சையமான மொழியான சமஸ்கிருதத்தில் செய்தி வாசிப்பதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாட்டில்ஏற்கனவே மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடக் கட்சிகள் தொடர்ந்து பல்வேறு கருத்துகளையும், ஆர்பாட்டங்களையும் முன்வைத்து வரும் நிலையில், தற்போது அரசு தொலைக்காட்சியில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நாளிலிருந்து இந்தி-சமஸ்கிருத திணப்பை அனைத்து மட்டத்திலும் மேற்கொண்டு வருகிறது.
பொதிகை உள்ளிட்ட மாநில மொழித் தொலைக்காட்சிகளில் சமஸ்கிருத செய்தித் தொகுப்பை வெளியிட வேண்டும் என்ற உத்தரவு மொழி ஆதிக்கத்தின் ஒளி-ஒலி வடிவம்.
தூர்தர்ஷனின் பொதிகையில் சமஸ்கிருத செய்தித் தொகுப்பு எதற்கு? உலக வழக்கழிந்த மொழியை மத்திய அரசு திணிப்பது ஏன்? இது பண்பாட்டு படையெடுப்பு. ஒருமைப்பாட்டைப் பிளக்கும் கோடரி. உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால் ஆட்சியாளர்களின் ஆணவமும், அதிகார மமதையும் உடையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’சமஸ்கிருத திணிப்பிற்கு துணைபோகும் தமிழ்நாடு அரசு’