சென்னை: 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க கோரி, தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 4 ஆவது நாளாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா நேற்று (டிச. 29) சென்னை தலைமை செயலகத்தில் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
4 நாளாகப் போராட்டம்: அந்த பேச்சுவார்த்தையில் தோல்வியடைந்ததை அடுத்து போராட்டத்தை 4 ஆவது நாளாக இன்றும் (டிச.30) தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் 103-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயக்கம் அடைந்தவர்கள் உடல் நிலை சரியான உடன் மீண்டும் போராட்ட களத்திற்கு வந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
ஆசிரியைகள் தங்களின் குழந்தைகளையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியை விஜயசுமத்திரா கூறும்போது, 'சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறோம்.
முதலமைச்சர் கவனம் தேவை: உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 100-க்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மீண்டும் திரும்பி போராட்டக்களத்திற்கு வந்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமவேலைக்கு சம ஊதியம் எப்போது வழங்குவார் என்பதை தெரிவிக்க வேண்டும். புத்தாண்டு வரும்போது இதனை அறிவித்தால், நாங்களும் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். இல்லாவிட்டால் அறிவிக்கும் வரையில் தொடர்ந்து போராடுவோம்' எனத் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் சுமதி வெங்கடேசன், செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
ஆளுநருக்கு தமிழ்நாடு பாஜக கோரிக்கை: பின்னர் பேசிய வி.பி.துரைசாமி, 'வரும் 9-ம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், ஆளுநர் பங்கேற்று உரையாற்ற உள்ளார். அந்த சட்டப்பேரவையில் இடைநிலை ஆசிரியர்கள் 20,000 பேருக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும் என தமிழ்நாடு பாஜக கேட்டுக்கொள்கிறது.
இந்த விவகாரத்தில் கௌரவம் பார்க்காமல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சந்தித்து பேசி நிறைவேற்றி தர வேண்டும். திமுக அறிவித்த நிறைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களிடமே தவறு செய்யக்கூடாது' என்றார்.
இதையும் படிங்க: 'தகுதியின் அடிப்படையில் திறமையான விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்' - அமைச்சர் பொன்முடி