தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளது. அந்த வகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட உள்ள கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தொகுதி பங்கீடுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக சார்பில் குழு ஒன்று அமைக்கப்படுவது வழக்கம். தொகுதிப் பங்கீட்டுக் குழு என அழைக்கப்படும் அந்த குழுவே கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும்.
பின்னர், கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளை எதிர்பார்க்கின்றன என்பதை திமுக தலைவரிடம் எடுத்துரைக்கும். அதன் பிறகு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, இது குறித்து ஆலோசனை நடத்தி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்யும் என்பது கவனிக்கத்தக்கது. இத்தகைய பலம் பொருந்திய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை திமுக தலைமைக் கழகம் இன்று (பிப்.26) அறிவித்துள்ளது.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழுவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக உயர்நிலைதிட்ட செயற்குழு உறுப்பினர் எ.வ.வேலு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவானது, நாளை முதல் தனது பணியை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற மார்ச் 7 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டமும், மார்ச் 14 ஆம் தேதி திருச்சியில் நடைபெறயிருந்த திமுக மாநில மாநாடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வரவேற்பு