சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் பொன்முடி ஆகியோர் மீது தொடப்பட்ட வழக்குகளை கீழமை நீதிமன்றம் முடித்து வைக்கப்பட்ட சூழ்நிலையில் அதைத் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் எடுக்கக் காரணம் என்ன? என்று கேள்வியை முன் வைத்தார்.
மேலும், நீதிமன்றத்தின் மீதும் நீதிபதிகள் மீதும் திமுகவிற்கு எப்போதும் நம்பிக்கை இருப்பதாகவும் அதே வேலையில் எடப்பாடி பழனிசாமி மீது 3,600 கோடி ரூபாய் செண்டர் முறைகேடு வழக்கில் நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்ட அவர், இரு வாரங்களிலேயே 44 லட்சம் ரூபாய் முறைகேடு வழக்கிலும் 72 லட்சம் ரூபாய் முறைகேடு வழக்கிலும் நீதிமன்றத்தின் நேரத்தைச் செலவழிக்கக் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்குகள் எல்லாம் இன்றோ நேற்றோ போட்டது அல்ல பத்தாண்டுக் காலமாக நடைபெற்று வரக்கூடிய வழக்குகளாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் தலையீடு இருப்பதாகச் சொல்ல மாட்டேன் ஆனால் அவர் குறிப்பிட்ட வழக்குகளை மட்டும் தேர்வு செய்து வழக்கு தொடர காரணம் என்ன? இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு வரும் பொழுது முழுவதும் எடுத்துச் சொல்லி வாதங்களை முன் வைத்து இதில் வெற்றி பெறுவோம்.
நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதற்கான உரிமை உண்டு பழிவாங்கும் எண்ணத்தில் வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு இதனை எதிர்கொள்ள திமுக முழுவதுமாக தயாராக இருக்கிறது. ஆனந்த வெங்கடேசன் அமர்வில், நான் வெளிவர முடியாத வகையில் ஜாமீன் தர மறுத்து கைது செய்யப்பட்டேன் ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த வழக்கையே தள்ளுபடி செய்தது, அதுபோல இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்.
கீழமை நீதிமன்ற தீர்ப்பினை வாசித்த பின் தனக்கு 3 நாட்கள் தூக்கம் வரவில்லை என நீதிபதி கூறியுள்ளார். அதனைக் கேட்டதும், எனக்கு 7 நாட்கள் தூக்கம் வரவில்லை. அதன்பின் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி பாடல் கேட்டபின் தான் தூக்கமே வந்தது எனக் கூறினார்.
மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தவே இந்த முயற்சிகள் நடக்கின்றன, நீதிமன்றத்தை நாங்கள் விமர்சனம் செய்யவில்லை, நீதிபதியையும் விமர்சனம் செய்யவில்லை, தீர்ப்பை மட்டுமே விமர்சனம் செய்கிறோம். திமுக ஆட்சியில் இல்லாத போது தான் ஜெயலலிதா மீதான வழக்கு தொடர்ந்தோம். கலைஞர் நினைவிடம் குறித்த வழக்கு தொடர்ந்தோம், அதனால் திமுக விற்கும், ஆட்சிக்கும், நீதிமன்றத்திற்கும் தொடர்பில்லை என்றார்.
அதனைத் தொடர்ந்து, அண்ணாமலை டிவிட்டரில் ஒரு வாரத்திற்கு முன்பே அமைச்சர்கள் குறித்துப் பதிவிட்டிருந்தார், அதன் தொடர்ச்சியாக வழக்கு எடுக்கப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, சிஏஜி அறிக்கையின் படி பிரதமர் மோடியின் மீது நான் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7.5 லட்சம் கோடி முறைகேடு, இறந்தவர்கள் மீது பில் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல்: நீதிபதி சந்துரு தலைமையிலான குழு 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு