கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்கள், மின் கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். கடந்த நான்கு மாதங்களாக மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு அரசு தெரிவிக்கும் காரணம், நகைச்சுவை உணர்வை தருகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கேரள மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை போன்று தமிழ்நாடு அரசும் மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து, மின் கட்டணம் உயர்வு குறித்து விவாதிக்க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அதில், மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனடிப்படையில், இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏந்தியும், தமிழ்நாடு அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லம் முன்பு ஸ்டாலின், கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தனது கண்டனங்களை தெரிவிக்கும் விதமாக கருப்புக் கொடி ஏற்றினார். இதில் தகுந்த இடைவெளியுடன் தொண்டர்கள் பங்கேற்றனர்.
அதேபோன்று சென்னை அண்ணா அறிவாலயம் வாயிலில் எம்.பி., தயாநிதி மாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்பகம் வாயிலில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் அவரது வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவு