சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், வளர்ச்சியை கருத்தில் கொண்டும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் திமுக ஆட்சி காலத்தில் மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை பறக்கும் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. மேலும், பறக்கும் சாலை திட்டம், ஈரடுக்குப் பாலமாக மாற்றப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை அதன் இயல்பான வடிவிலேயே தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்ரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டம் முடிவடைந்த நிலையில் காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது அனைவரையும் கைது செய்தால் மட்டுமே கைதாவோம் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.