திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவதூறாகப் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கண்டித்து ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆவடி சட்டப்பேரவை உறுப்பினரும் அமைச்சருமாகிய மாஃபா பாண்டியராஜன் சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் மிசா காலத்தில் சிறை சென்றது குறித்து அவதூறாகப் பேசிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைப் பார்த்த திமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொதித்தெழுந்தனர்.
இந்நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை எதிர்த்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆவடி மாநகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சா.மு. நாசர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் விஜி ராஜேந்திரன், கிருஷ்ணசாமி உள்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும் அவர் பேசியதை திரும்பப் பெற்று ஸ்டாலினிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் தவறும் பட்சத்தில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெறும் என திமுகவினர் எச்சரித்துள்ளனர்.