சென்னை: இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய, நகர, நகரிய பேரூர், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழுக் கூட்டம் 9.10.2022 தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணிக்கு அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்” நடைபெறும்.
அப்போது திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். மேற்கண்ட பொறுப்புகளுக்காக வேட்புமனுக்கள் 7.10.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும். இப்பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் வேட்புமனுக் கட்டணமாக ரூ.50,000 அளித்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர்களைப் பொதுக்குழு உறுப்பினர்கள் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் உட்பட) ஐவர் முன்மொழிய, ஐவர் வழி மொழிய வேண்டும். அனைத்து நடைமுறைகளிலும் கழகத் தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பதவியை இழந்த திமுக மாமன்ற உறுப்பினர் மீண்டும் செயல்பட அனுமதி