திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் காணொலி மூலம் இன்று (ஜூலை 30) நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு உள்ளிட்டவர்கள் காணொலி மூலம் பங்குபெற்றனர்.
திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தின் முடிவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,
- 'கலைஞர் நினைவு நாளை, தக்க வகையில் நெஞ்சில் ஏந்துவோம்;
- ''கரோனா போராளிகள்'' என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் சிறப்பு செய்வது;
- ஏழை எளியவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்குவோம்.
- மத்தியத் தொகுப்பிற்கு 'தமிழ்நாடு அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு', 'இடஒதுக்கீடு கோரிக்கை ஆதாரப்பூர்வமானது’ என்று சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை திமுக வரவேற்பதோடு, கலைஞர் வழி நின்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெற்ற சமூக நீதி வெற்றிக்குப் பாராட்டு தெரிவிப்பது;
- 'புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை -2020'-ஐ வெளியிட்டு - அதன்மீது 'கருத்துக் கேட்பு' என ஒரு கண் துடைப்பு நாடகத்தையும் நடத்த முனைந்திருப்பதற்கு, இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை-2020-ஐத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றது;
- இறுதியாக நேற்றைய தினம்(ஜூலை 29) புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நாடாளுமன்ற அமர்வு இல்லாத இந்த நேரத்தில் - மக்கள் பிரதிநிதிகளின் விவாதத்திற்கே இடம் அளிக்காமல் - இக்கொள்கை குறித்து மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒட்டுமொத்தத் தமிழ்நாடு மக்கள் கொண்டுள்ள எண்ணத்தின் எதிரொலியாக திராவிட முன்னேற்றக் கழகம் காட்டிய வலிமையான எதிர்ப்பினை அடுத்து, 'இந்தி கட்டாயம் அல்ல' என்று புதிய கல்விக் கொள்கை - 2020-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், 'மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் கல்விக் கொள்கை' திட்டத்தை, திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் ஆணித்தரமாகவும், கடுமையாகவும் எதிர்த்து, நிராகரிக்கிறது;
- 'மழலைக் கல்வியைக் கூட மத்திய அரசு முடிவு செய்யும்' என்கிற இந்த தேசியக் கல்விக் கொள்கை; திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த பரிந்துரைகளுக்கு எதிராக இருக்கிறது. அதனால், இதை திமுக எதிர்க்கிறது; அதுமட்டுமின்றி, பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது
இதையும் படிங்க...முதலமைச்சருடன் ஜெனீவா உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சந்திப்பு