சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்ட விழா கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. அதில் திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டு பேசினார்.
அதில் அவர் பட்டியலின மக்களை மிகவும் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீது மதுரையைச் சேர்ந்த ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மார்ச் 13ஆம் தேதி புகார் மனு அளித்தார்.
இது குறித்து அவர் மனுவில், "கலைஞர் வாசகர் வட்ட விழாவில் திமுகவின் அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி, திமுக காலத்தில் ஹரிஜன நீதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களை நியமனம் செய்தது திமுகதான்.
நீதிபதி பதவிகள் திமுக போட்ட பிச்சை. திமுகதான் பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
சட்டப்படி தடைசெய்யப்பட்ட ஹரிஜன் என்ற வார்த்தையை ஆர்.எஸ். பாரதி திரும்பத் திரும்ப பட்டியலினத்தவர்களை அவமதிக்கும் வகையில் பேசியிருக்கிறார். அவரின் பேச்சு உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. அது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரின் இத்தகைய செயல்பாடு பட்டியலின மக்களிடையே மன வேதனையை ஏற்படுத்திருக்கிறது.
பட்டியலின மக்களை எளக்காரமாகப் பார்க்கும் நிலையை திமுகவினர் ஏற்படுத்திவிட்டனர். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹரிஜன் எனக் குறிப்பிட்டு நீதிபதிகளை அவதூறாகப் பேசியது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவரது நாடாளுமன்றப் பதவியை தகுதியிழக்க செய்ய வேண்டும்’’ எனக் கூறியிருந்தார். அது தொடர்பாக ஆர்.எஸ். பாரதி பேசிய காணொலி ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
அதையடுத்து அந்தப் புகார் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் பிரிவு 3(1) (u), 3 (1) (5) (பட்டியலின மக்களைத் தரக்குறைவாகப் பேசுதல்), எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து அந்த வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் இன்று அதிகாலையில் நங்கநல்லுாரில் உள்ள ஆர்.எஸ். பாரதியின் வீட்டில் அவரை கைதுசெய்தனர்.
அதன்பின் அவர் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டார். விசாரணையில் ஆர்.எஸ். பாரதி, "எனது மகன் மருத்துவமனை ஒன்றில் கரோனா வார்டில் மருத்துவராக இருக்கிறார். அதனால் எனக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து அவரது வழக்குரைஞர்கள், "ஏற்கனவே இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. அதனால் இந்த வழக்கில் இடைக்கால பிணை வழங்க வேண்டும்" என்று வாதிட்டனர்.
தொடர்ந்து அவருக்கு இம்மாதம் 31ஆம் தேதிவரை இடைக்கால பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஜூன் 1ஆம் தேதியன்று மீண்டும் ஆர்.எஸ். பாரதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி பிணை பெற்றுக்கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆர்.எஸ். பாரதி இடைக்கால பிணையில் விடுவிப்பு