சென்னை: மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (மே 26) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய ஒப்பந்ததாரர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “போர்களத்தில் குதிரைப்படை, யானைப்படை போன்றவற்றை பயன்படுத்துவது போல ஐ.டி., சிபிஐ., அமலாக்கத்துறை போன்றவற்றை பாஜக ஏவி விட்டுள்ளது.
நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால், தோல்வி பயம் காரணமாக இது போன்ற ஐ.டி சோதனைகளை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கும் நேரம் பார்த்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஐ.டி சோதனையை மத்திய பாஜக மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தொழில் முதலீடுகளை முதலமைச்சர் ஈர்த்துக்கொண்டிருக்கிறார். இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத பாஜக, இது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், கோவையில் திமுக குறைவான இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், நடந்துமுடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
வெற்றிக்கு காரணம் செந்தில் பாலாஜி என்று அவரை முடக்குவதற்கு திட்டமிட்ட பாஜக, சோதனை நடத்தி வருகிறது. இதற்கெல்லாம் திமுக அஞ்சாது, உண்மையிலேயே தவறு நடைபெற்றிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். காலையில் 3 மணிக்கு தகவல் கொடுக்காமல் அதிகாரிகள் சென்றதால், யார் என்று தெரியாமல் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். ஐ.டி. சோதனை செய்தால் அந்த பகுதிக்குட்பட்ட காவல் துறையினரிடம் தகவல் கொடுப்பது வழக்கம்.
ஆனால் தகவல் கொடுக்காமல் அதிகாரிகள் சென்றுள்ளனர். கர்நாடகா தேர்தல் தோல்வியை தொடர்ந்து பேசிய அண்ணாமலை, செந்தில் பாலாஜி மீது இன்னும் 10 நாட்களில் ஐ.டி. சோதனை நடைபெறும் என்று கூறியிருந்தார். அவர் கூறியது போன்று, பழிவாங்குவதற்காக சோதனை நடைபெறுகிறது” என கூறினார்.
இதையும் படிங்க: கோவை ஐடி ரெய்டு அட்ராசிட்டீஸ்.. வெஜ் பிரியாணி உடன் ஆதரவு தரும் திமுகவினர்!