திமுகவின் பொதுச்செயலாளராக இருப்பவர் துரைமுருகன். தொடக்க காலத்திலிருந்து திமுகவில் இருக்கும் துரைமுருகன் கருணாநிதியின் நிழலாக திகழ்ந்தவர்.
அதேபோல் தற்போதைய திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினுக்கும் இருக்கிறார். அவரது மகன் கதிர் ஆனந்த். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக இருக்கிறார்.
இந்நிலையில் அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் என கருதப்படும் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “ஆணாக பிறந்தாலும் பெண்ணாக பிறந்தாலும் நல்ல நேரம் வரும்போது திருமணத்தை பெற்றோரே செய்து வைப்பார்கள்.
அதுவரை பெற்றோருடன் சந்தோஷமாக வாழுங்கள். அந்த மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ்நாளில் என்றுமே திரும்பக் கிடைக்காது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கதிர் ஆன்ந்த்தின் இந்தப் பதிவு தற்போது சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சாதி மறுப்பு திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்த பேரறிஞர் அண்ணா நிறுவிய கட்சியின் எம்.பி இப்படி பதிவு செய்வதன் மூலம் அவர் காதல் திருமணங்களை விரும்பவில்லையா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்குள் பாமகவை கொண்டுவர துரைமுருகன் தீவிரமாக முயற்சித்ததாக பேச்சு அடிபட்ட சூழலில் கதிர் ஆனந்தின் இந்தப் பதிவு திமுகவின் பொதுச்செயலாளரும், அவரது மகனும் சாதிய மனப்பான்மையில் இருப்பதாகவே கருத தோன்றுகிறது என்கின்றனர் ஒரு தரப்பினர்.
சமூக நீதியை விருப்பப் பாடமாக எடுத்து படிக்கலாம், சாதியை ஒழிக்கும் கிராமங்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட திட்டங்களை திமுக அறிவித்துக்கொண்டிருக்கும்போது இவ்வாறு பதிவு செய்வது நிச்சயம் திமுக மீது அதிருப்தியை அதிகரிக்கும் எனவும் திமுகவில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஆகமொத்தம், நல்ல நேரம் போஸ்ட் போட்டு கதிர் ஆனந்த் தனக்கு கெட்ட நேரத்தை உருவாக்கியிருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர். இதுதொடர்பா கதிர் ஆன்ந்த் இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.